சென்னை, ஜூன் 14: நீட்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சென்னையை சேர்ந்த ஏழை மாணவி ஜீவிதா பற்றிய செய்தியை நியூஸ்டுடே பத்திரிக்கையில் படித்த மும்பையை சேர்ந்த மருத்துவர் மகாலட்சுமி அவருக்கு உதவ முன்வந்துள்ளார். மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வில் அனகாபுத்தூரை சேர்ந்த டெய்லரின் மகள் ஜீவிதா 720-க்கு 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து இருந்தார். இது பற்றிய செய்தி கட்டுரையை நியூஸ்டுடே இதழ் 10-ம் தேதி வெளியிட்டு இருந்தது.

இதை படித்த மும்பையை சேர்ந்த மருத்துவர் மகாலட்சுமி நியூஸ்டுடே அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஜீவிதாவின் படிப்பிற்கு உதவ தானாக முன்வந்தார்.
கோவையில் பிறந்து வளர்ந்த 33 வயதான அறுவை சிகிச்சை மருத்துவரான மகாலட்சுமி மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவரும், கயனோகாலஜிஸ்ட் (வயிறு சம்பந்தப்பட்ட நோய்) மருத்துவர் ஆவார்.

இது குறித்து மகாலட்சுமி கூறுகையில், ஜானகிராமன் அறக்கட்டளையை எனது தந்தை நிறுவி மருத்துவ உதவி தேவைப்படும் வேலைகளுக்கு உதவி வந்தார். அவரது மறைவிற்கு பிறகு நானும், எனது சகோதரிகளும் எங்களது குடும்பத்தினரின் வர்த்தகம் வாயிலாக கிடைக்கும் வருவாய் மூலம் உதவி செய்து வருகிறோம். நியூஸ்டுடே பத்திரிக்கையில் ஜீவிதா பற்றி வெளிவந்த செய்தி கட்டுரையை படித்த பிறகு என் தந்தை என்ன செய்திருப்பாரோ அதையே நானும் செய்ய முன்வந்து இருக்கிறேன்.

சென்னையில் சிறந்த பயிற்சி மையத்தில் ஜீவிதா பயிற்சி பெற்று முதுகலை மருத்துவப்படிப்பில் இடம் பெறுவதற்கு உதவுவோம் என்றார். டாக்டர் மகாலட்சுமியின் உதவும் உள்ளத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்த ஜீவிதா கூறுகையில், எனது பெற்றோர் நீட் பயிற்சிக்காக கடன் வாங்கியிருந்தார்கள். எனக்கு டாக்டர் மகாலட்சுமி உதவ முன்வந்திருப்பது என் பெற்றோரின் சுமையை குறைப்பதாக உள்ளது. நானும், மருத்துவம் படித்து கயனோகாலஜிஸ்ட் மருத்துவர் ஆவேன் என உறுதியளித்தார்.

ஜீவிதாவின் தாயார் பி.பவானி கூறுகையில், எனது மகள் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற எனது ஆசையை என்னிடம் கூறிய போது நான் தயங்கினேன். நம்மால் முடியுமா என்று வருந்தினேன். ஆனால் இப்போது மகாலட்சுமி உதவ முன்வந்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையாகவும் இருக்கிறது. என் மகள் சரியான பாதையில் சென்று தனது குறிக்கோளை அடைவாள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.