சவுதாம்டன், ஜூன் 15: விண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில், ஜோ ரூட்டின் அபார சதத்தால் 33 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் 19-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்து-விண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, விண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. நிக்கோலஸ்(63) தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தவேகத்தில் நடையை கட்டினர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விண்டீஸ் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோ ரூட் 94 பந்துகளில் சதம் விளாசியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இவரின் அபார சதம் மூலம் 33.1 ஓவர்களிலேயே 213 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.