புதுடெல்லி, ஜூன் 15: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.  பிற்பகலில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது நிர்வாகக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.  மோடி தலைமையில் மத்திய அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்னர், முதன் முறையாக நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சருடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.  நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமரை அவரது இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.  தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள வறட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார்.

பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் முதலமைச்சர் சந்தித்து தமிழகத்துக்கு ஏற்கனவே தர வேண்டிய மத்திய அரசின் நிதியை தருமாறு வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்தினார்.
நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்குவார்.

அப்போது தமிழக அரசின் புதிய தலைமை செயலர் மற்றும் டிஜிபி நியமனம் குறித்து, உள்துறை அமைச்சரிடம், முதல்வர் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.  மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என அக்கட்சி கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் உள்துறை அமைச்சருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.