கோபி, ஜூன் 15: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தியே என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து கூறியதாவது:- தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான தகவல் தவறானது.

சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்ப்பது குறித்து வரும் 17-ம் தேதி முதல் ஆலோசனை நடைபெற உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை பள்ளிகள் தீர்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் டிங்கர் லேப் வசதி செய்து தரப்படும். மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடைகள் படிப்படியாக வழங்கப்படும். 2017- 2018-ம் ஆண்டில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி 2 மாத காலத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.