சென்னை, ஜூன் 15: சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் காதலனால் வெட்டுப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதலன் தன்னை வெட்டுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 7 மணியளவில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாக வெட்டினார்.இதில் இளம்பெண்ணின் தாடை மற்றும் கன்னம், கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அப்போது அந்த வாலிபர் பீச் செல்லும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய இளம்பெண்ணை போலீசார் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கும், வாலிபரை மீட்டு ராஜீவ்காந்தி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இரவு 10.30 மணிக்கு வெட்டுப்பட்ட பெண் கண் விழித்தார். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:- என் பெயர் தேன்மொழி (வயது 26) என் தந்தை பெயர் வீரமணி. ஈரோடு மாவட்டம் கொண்டச்சிபாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமம். நானும் ஈரோடு மாவட்டம் ரூபியான்பாக் பகுதியைச் சேர்ந்த விஜயராகவனின் மகன் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம்.அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பெற்றோர் பேசுவதற்கும் தடை விதித்தனர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.  இந்த நிலையில் நான் வேலை கிடைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்துவிட்டேன். இதையடுத்து சுரேந்தர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்தார்.

நானும் எனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரெயில் நிலையம் சென்றேன். நேற்றும் மாலை 6 மணியளவில் இருவரும் அங்கு பேசினோம். அப்போது எனது நிலையை எடுத்துக் கூறினேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வாழ்க்கையில் ஒன்று சேரவில்லை என்றால் சாவில் ஒன்று சேர்வோம் என்று கூறி திடீரென நான் எதிர்பாராத நிலையில் சுரேந்தர் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்.
இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் காதல் தகராறில் சுவாதி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காதலன் கவலைக்கிடம்: போலீஸ் தரப்பில் தகவல்

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து, ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிவாள் வெட்டால் பலத்த காயமடைந்த தேன்மொழி சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளதாகவும் கூறினார்.

அதே சமயம், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சுரேந்திரன் கவலைக்கிடமாக உள்ளதாக டிஜிபி தெரிவித்தார். ‘
தேன்மொழியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது ரெயில் விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

நுங்கம்பாக்கம் சுவாதி கொலைக்கு பிறகு, அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களும் முழுமையான சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறு ரெயில் நிலையங்களில் முழுமையான சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்.

பரபரப்பான மாலை வேளையில் நடந்த இந்த துணிகரச் சம்பவத்தை அடுத்து ரெயில் நிலையங்களில் கூடுதல் காவல் துறையினரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். இதற்கிடையே சுரேந்திரனுக்கும், தேன்மொழிக்கும் வாக்குவாதம் நடந்த போது நேரில் பார்த்த துப்புரவு பெண் பணியாளர், பொது இடத்தில் தகராறில் ஈடுபட வேண்டாம் என்று காவலர்கள் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை என்று கூறினார்.
– செய்தி, படம்: கோகுலன் கிருஸ்ணமூர்த்தி