சென்னை, ஜூன் 15: இரண்டு மாத காலமாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றுள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடை காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வங்கக்கடலை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும், அரபிக்கடலை ஒட்டியுள்ள மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் மீன்பிடி தடை காலம் நடைமுறையில் உள்ளது. முதலில் 45 நாட்கள் இருந்த மீன்பிடி தடை காலம் கடந்த 2 ஆண்டுகளாக 60 நாட்களாக உயர்த்தப்பட்டது.

அந்தவகையில் தமிழ்நாடு உள்ளிட்ட கிழக்கு கரையோர மாநிலங்களில் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவக் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. குறுகிய தூரம் செல்லும் நாட்டு மர படகுகள் மூலம் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.  இதைதொடர்ந்து இன்று அதிகாலையிலேயே விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இரண்டு மாத காலமாக மீன் பிடிக்கப்படாததால் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, தங்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.= கடந்த இரண்டு மாத காலமாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதால் மீன்களின் விலை ஓரிரு நாளில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.