திருச்சி, ஜூன் 15: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்திவரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இந்தநிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, தஸ்பிகாராணி (வயது 22) என்ற பெண் பயணி, மொத்தம் 465 கிராம் எடை கொண்ட 3 தங்க கட்டிகளையும், 149.5 கிராம் எடை கொண்ட ஒரு தங்க சங்கிலியையும் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 614.5 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். மேலும் இதுபற்றி தஸ்பிகாராணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மற்றொரு ஏர்ஏசியா விமானத்தில் மொத்தம் 148.5 கிராம் எடைகொண்ட 2 தங்க சங்கிலிகள் கேட்பாரற்று கிடந்தன.

அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் ஆகும். இதுபற்றி தகவலறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த 2 சங்கிலிகளையும் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்தது யார்? யாருக்காக கடத்தி வந்தனர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஒரே நாளில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 763 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.