அகமதாபாத், ஜூன் 15: வாயு புயல் மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 17, 18-ந் தேதிகளில் குஜராத்தை புயல் தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை மிரட்டிய வாயு புயல் திடீரென தனது திசையை மாற்றி ஓமன் நோக்கி நகரத் துவங்கியது. இதனால், குஜராத்திற்கு இனி அச்சுறுத்தல் இல்லை என்று அம்மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி கூறினார்.

இந்த நிலையில், வாயு புயல் மீண்டும் திசை மாறியுள்ளது. புதன் மற்றும் வியாழன் நள்ளிரவில் திசை மாறிய வாயு புயல், அடுத்த 48 மணி நேரத்தில் குஜராத் கடற்கரையை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கட்ச் பகுதியை ஜூன் 17- 18 ஆகிய தேதிகளில் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக தீவிர புயலாக இருந்த வாயு, வலுவிழந்து தீவிர புயல் அல்லது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக கடற்கரையை தாக்கக் கூடும் என்றும் புவி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். முன்னதாக, வியாழன் அன்று போர்பந்தர் மற்றும் வீரவல் பகுதியை வாயு புயல் தாக்கும் என்று கூறப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொண்டு இருந்த சூழலில் ஓமன் நோக்கி நகர்ந்தது.

மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அகமதாபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மோஹந்தி கூறுகையில், புயல் மீண்டும் திரும்பி கட்ச் அல்லது சவுராஷ்டிரா பகுதியை தாக்கும். இப்போது கணிக்க முடியாது. அடுத்த 48 மணி நேரத்தில் இது திசை மாறும் என்றும் அவர் கூறினார்.