சென்னை, ஜூன் 15: ஐஐடிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் எஸ்.பிரஜித் 372க்கு 293 மதிபெண்கள் பெற்று தேசிய அளவில் 33வது இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்களில் சேர்க்கை பெற முடியும். இந்த நிலையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த முதன்மைத் தேர்வை 1 லட்சத்து 61,319 பேர் எழுதினர். இதில் 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,356 பேர் மாணவிகள். மகாராஷ்டிர மாநிலம் பாலர்பூரைச் சேர்ந்த மாணவர் குப்தா கார்திகேய் சந்திரேஷ் 372-க்கு 346 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அலாகாபாதைச் சேர்ந்த ஹிமான்ஷு கௌரவ் சிங் இரண்டாம் இடமும், புதுதில்லியைச் சேர்ந்த அர்ச்சித் பூப்னா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். ஹைதராபாதைச் சேர்ந்த ஷப்னம் சஹாய் 372-க்கு 308 மதிப்பெண்கள் பெற்று மாணவிகளில் அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே முதல் 1000 இடங்களில் இடம் பிடித்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரஜித் அகில இந்திய அளவில் 33 வது இடமும், மாநில அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார். இவர் 372க்கு 293 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

ஜேஇஇ தேர்வுக்காக நான்கு ஆண்டுகள் தன்னை தயார் படுத்தியதாகவும், சென்னை ஐஐடியில் கணிணி அறிவியல் அல்லது எலக்ட்ரிக்கல் படிப்பில் சேர விரும்புவதாகவும் இவர் கூறினார்.  இதேபோல் சுமிதன் ரமேஷ் என்பவர் 248 மதிப்பெண்கள் பெற்று 248வது ரேங்க் பெற்றுள்ளார். 2 ஆண்டுகளாக இந்த தேர்வுக்கு படித்து வந்ததாகவும் சென்னை ஐஐடியில் மின் பொறியியல் படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த இன்னொரு மாணவர் கௌரவ் பிரகாஷ் 245 மதிபெண்கள் பெற்று 278வது ரேங்கில் உள்ளார். இவர் சென்னை ஐஐடியில் கணிணி அறிவியல் படிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.  நாடுதழுவிய அளவில் 23 ஐஐடிகளில் 10500 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.