சென்னை, ஜூன் 16: சென்னை அருகே பட்டாபிராமில் நடைபெற்ற உலக முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பென்ஜமின் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை 10.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது என்றார்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் உலக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், சமூக நலத்துறை திட்ட ஆணையர் வே. அமுதவல்லி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பென்ஜமின் பேசுகையில், தேசிய மக்கள் தொகையில் உள்ள முதியோர்களின் சதவீதத்தை விட தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை 10.4 சதவீதமாக அதிகரித்து உள்ளது. தேசிய அளவில் முதியோர் எண்ணிக்கை 8.6 சதவீதமாக இருக்கிறது.

தமிழகத்தில் முதியோர் நலனை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தபோதிலும் அவர்களது பொருளாதார மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை. முதியோர்களின் நலத்திட்டத்துக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பொது வாழ்விலும் உறவுகளாலும் முதியோர்களுக்கு ஏற்படும் வன்முறையை தடுப்பதும் நமது கடமை என்றார்.