சென்னை, ஜூன் 16: ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருவதால் அடுத்து வரும் நாட்களில் கேன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டியது வரும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வீடுகள் தோறும் கேன் குடிநீர் வழங்குவதற்காக சுமார் 1 லட்சம் சிறிய கடைகள் உள்ளன. மளிகை கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் தனி ஆட்கள் நியமித்து கேன் குடிநீர் விநி யோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இடத்துக்கு தக்கவாறு ஒரு கேன் குடிநீர் ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து கேன்களில் அடைக்கிறார்கள். இதற்கென பதிவு செய்யப்பட்ட ஆலைகள் சென்னையில் மட்டும் 26 இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் 200க்கும் அதிகமான ஆலைகள் உள்ளன. தற்போது ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வறண்டு வருவதாக தெரியவந்துள்ளது.  கடந்த 15 நாட்களில் மட்டும் தாங்கள் தண்ணீர் எடுத்து வரும் ஆழ்துளை கிணறுகளில் பாதி வறண்டு விட்டதாக சென்னையில் வாட்டர் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த கிணறுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் இறைக்கக்கூடாது என பொதுப்பணித்துறை கட்டுப்பாடு விதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலத்தடி நீரை எடுப்பதற்கான விதிமுறைகளை வகுத்து அரசிதழில் வெளியிட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாடு கேன் குடிநீர் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. கண்ணன் கூறுகையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் மழை பெய்யாவிட்டால் எங்களது தொழிற்சாலைகளை மூடவேண்டியது இருக்கும் என்றார்.

மேலும் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு குரோம்பேட்டை, தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கேன் குடிநீர் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.