சென்னை, ஜூன்.16:  அபிராமபுரத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை திருடியதாக கூறப்பட்ட புகாரில் அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்கா ரோட்டில் வசிப்பவர் மகாலட்சுமி (வயது 50). இவர் பிரபல கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவருடைய உறவினர் ஆவார்.

இவரது வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் காணவில்லை என்றும் இந்த திருட்டு தொடர்பாக தங்கள் வீட்டில் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை பார்த்து வரும் பணிப்பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கடந்த 13 ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அபிராமபுரம் போலீசார் அந்த வீட்டில் பணிபுரிந்த தேனாம்பேட்டையை சேர்ந்த சுதா (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டன.