மாவேலிகரை,ஜூன் 16: கேரள மாநிலம் ஆலப்புழையில் பெண் காவலர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் 4 .30 மணி அளவில் இவர் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால், சவுமியா மீது மோதியுள்ளார்.

அதில் சவுமியா நிலை தடுமாறி கீழே விழுந்ததும், காரில் இருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ், சவுமியாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் விரட்டி சென்று சவுமியாவை பலமுறை கத்தியால் குத்தி கொன்றார் அஜாஸ்..!
அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து சவுமியாவின் சடலத்தின் மீது ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறப்படுகின்றது.

அப்போது பெட்ரோல் பட்டதால் அஜாஸ் மீதும் தீபற்றியது. இதனால் ஆடையில் தீ பற்றிய நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை கலைந்து உயிர் தப்பிய போலீஸ்காரர் அஜாஸை மடக்கி பிடித்த அக்கம்பக்கத்து வீட்டார் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து போலீஸ்காரர் அஜாஸை மீட்டனர். அவரது உடலிலும் தீக் காயங்கள் காணப்பட்டதால் அவரை ஆலப்புழை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்சுக்கும், 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது. இந்த கொலைக்கான பின்னணி என்ன ? எதற்காக சவுமியாவை அஜாஸ் கொலை செய்தார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.