சென்னை, ஜூன் 17: தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், ஸ்டிரா, கைப்பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து சாலையோர உணவகங்கள், உணவுவிடுதிகளில் பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு குறையத் தொடங்கியது. பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் துணிப்பை, தோள்பைகளை எடுத்துச் சென்று வந்தனர்.

எனினும் பிளாஸ்டிக் தடுப்புக்கான அரசு நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், சிறிய, பெரிய கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்தது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதாவது, பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பிடிப்பட்டால் முதன்முறையாக ரூ.25 ஆயிரமும், 2-வது முறை ரூ.50 ஆயிரமும், 3-வது முறை ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கவும், 4-வது முறை பிடிபட்டால் விற்பவரின் கடை உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.