நாகர்கோவில், ஜூன் 17: விவசாயிகளின் கடனை அடைப்பதற்காக எனது சொத்துக்களை எழுதி தரத் தயார்,அதே போல் நீங்கள் தயாரா என்று காங். எம்பி திருநாவுக்கரசருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உழைத்த பிஜேபி தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ‘எம்.பி.க்களின் சொத்தை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க சொல்லும் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

எனது சொத்துக்களை எழுதி தர நான் தயார். அதுபோல தங்களது சொத்துக்களை எழுதி தர அவரும், அவரது கட்சி எம்.பி.க்களும் தயாரா?. எனது மொத்த சொத்து விவரங்களையும் தருகிறேன். அதுபோல் அவர்களும் வரட்டும். அவ்வாறு எழுதினால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழக மக்களுக்கும், குமரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் என்றார்.