புதுடெல்லி, ஜூன் 17: 17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் பிஜேபி கூட்டணி அபார வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் 31-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ம் தேதி (இன்று) கூட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று 17-வது நாடாளுமன்ற மக்களவை முதன்முறையாக கூடுகிறது. இதையொட்டி இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜேபி எம்.பி. வீரேந்திர குமார் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவை கூடியதும் இன்றும் நாளையும் புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.