கூடுதலாக 6 மதிப்பெண்கள் குருப்-1 தேர்வு வழக்கில் டிஎன்பிஎஸ்சி, ஐகோர்ட்டில் பதில்

சென்னை தமிழ்நாடு

சென்னை, ஜூன் 17: குருப்-1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்ட விவகாரத்தில் அமைத்து மனுதாரர் உள்ளிட்டோருக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என ஐகோர்ட்டில் தேர்வாணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தில் முறையீடு செய்ததாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்- 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளையும் மறு மதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்.சி- க்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3 ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென தேர்வாணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
டி.என்.எஸ்.சி- யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப்- 1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என எச்சரித்தார்.பின்னர், இதுதொடர்பாக ஜூன் 17 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி- க்கு உத்தரவிட்டார்.

அந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணைச் செயலாளர் தாரா பாய் தாக்கல் செய்த பதில் மனுவில், குரூப் 1 முதல் நிலைத் தேர்வு மாதிரி விடைத்தாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு முறையீடு செய்தனர்.

இவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளது. 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை அறிக்கை அளித்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படை யிலேயே மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது.

இதுபோன்ற அரசு பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிடக் கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.  இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.