சென்னை, ஜூன் 17: தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் சாலை ஓரம் நின்றிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோயம்பேடு அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேரூந்து நிறுத்தம் அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு பெண் உட்பட 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது கோயம்பேட்டில் இருந்து சென்னீர்குப்பத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. பேரூந்து நிறுத்தம் அருகே வந்த போது திடிரென்று தறி கெட்டு ஓடிய அந்த லாரி பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி காயமடைந்தவர்கள் 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பெண்ணின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது காளியம்மாள் என்பதும் தெரியவந்தது. மேலும் நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவரது மனைவி காளியம்மாள் (வயது 65). இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகின்றனர். அதற்காக மீன் வாங்க வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு செல்வதற்காக இன்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் நெற்குன்றம் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததும் அப்போது தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதியதும் தெரியவந்தது.

மேலும் அவர்களுடன் நெற்குன்றத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 33) மற்றும் கும்மிடிபூண்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 34) ஆகிய இருவரும் பேரூந்திற்காக காத்திருந்ததும் அப்போது அவர்கள் மீது தண்ணீர் லாரி மோதியதும் தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இந்த விபத்து தொடர்பாக மயிலாடுதுறையை சேர்ந்த விஜயபாலன் (வயது 35) என்ற தண்ணீர் லாரி டிரைவரை கைது செய்தனர்.