மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துக: ராமதாஸ்

சென்னை

சென்னை, ஜூன் 17: நிலத்தடி நீர் வளம் பெருக்க மழைநீர் சேமிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும்.

ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.வழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை.

95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும்.வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.