சென்னை, ஜூன் 17: பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலும், வாங்கினாலும் அபராதம் விதிக்கும் முறை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் 200 வார்டுகளிலும் குழுக்கள் அமைத்து கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் ரூ.100 முதல் அதிக பட்சமாக ரூ 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பனை செய்வதற்கும் அரசு தடை விதித்தது.  இதையடுத்து சாலையோர உணவகங்கள், உணவுவிடுதிகளில் பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு குறையத் தொடங்கியது. பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் வீட்டில் இருந்தே அதற்கான பைகளை எடுத்துச் சென்று வந்தனர்.

இதனிடையே பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் போதியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியது. பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.  இந்நிலையில், பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, இன்று திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதாவது, பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ.50 ஆயிரமும், மூன்றாவது முறை பிடிப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கவும், நான்காவது முறையாக பிடிபட்டால் விற்பவரின் கடை உரிமத்தை ரத்து செய்து ரூ5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தலைநகர் சென்னையை பொறுத்தவரை, அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற மாநகராட்சி பகுதிகளிலும், மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.