புதுடெல்லி, ஜூன் 18: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று மக்களவையில் உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழியேற்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியைச்சேர்ந்த 38 பேர் வெற்றி பெற்றனர். புதுவையில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 17-வது மக்களவை கூட்டம் நேற்று துவங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் நேற்று பதவியேற்றனர். ¢தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இன்று இரண்டாவது நாளாக பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று பதவியேற்றார்கள். திமுக உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ராமலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கௌதம் சிகாமணி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவியேற்றார்கள். அவர்கள் தமிழில் உறுதிமொழியேற்றனர்.

அதிமுக உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் தமிழில் உறுதிமொழியேற்றார். ‘வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித்தலைவி அம்மா வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்’ என்று கோஷமிட்டார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் சபாநாயகருமான வைத்திலிங்கம் தமிழில் உறுதிமொழியேற்றார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எஸ்.திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் தமிழில் உறுதி மொழியேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி, கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் உறுப்பினர் சின்ராஜ், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோரும் தமிழில் உறுதி மொழி ஏற்றனர்.

தயாநிதி மாறன் உள்ளிட்ட சில திமுக உறுப்பினர்களும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று கோஷமிட்டார்கள். இதற்கு பதிலடியாக பிஜேபி உறுப்பினர்கள் பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டதால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. சிலர் கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, சமத்துவம் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினார்கள்.

காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமார் காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டார். எச்.வசந்தகுமார், ஜெய் ஜவான், ஜெய் கிஷான், வாழ்க காமராஜர், வாழ்க ராஜீவ் காந்தி என்று கோஷமிட்டார். திருமாவளவனும், ரவிக்குமாரும் வாழ்க அம்பேத்கர் என்று கூறினார்கள்.
புதிதாக பதவியேற்ற உறுப்பினர்கள் அனைவரும் ரிஜிஸ்டரில் கையெழுத்துவிட்டு சபாநாயகரை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து பெற்றனர்.