சென்னை, ஜூன் 18:  சென்னையில் பேருந்தின் கூரை மீது நின்றபடி பஸ்-டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 10 பேர் மீது அமைந்தகரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரி தொடங்கும் நாளை ‘பஸ்-டே’வாக கொண்டாடுவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. பஸ்-டே என்ற பெயரில் பேருந்தின் கூரை மீது ஏறி நின்று கோஷமிடுவது, பேருந்திற்குள் ஏறி கூச்சலிட்டு, சக பயணிகளை அச்சுறுத்துவது மற்றும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

கொண்டாட்டம் சில நேரங்களில் கலவரமாக மாறுவதும் உண்டு. கல்லூரி பாகுபாடு கருதி, கல்லெறி சம்பவங்கள், அடி தடி, ஆயுதங்களால் தாக்குவது போன்ற குற்றச்செயல்களும் நடந்தேற இத்தகைய கொண்டாட்டங்கள் வழிவகுப்பதாகவும், இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் எழுந்த புகாரின்பேரில் பஸ்-டே கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடைப்போட்டது. இந்த தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. ஆனால், இதையும் மீறி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவருகிறது.

இதனிடையே, கோடை விடுமுறைக்கு பின், நேற்றுதான் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அமைந்தகரை புல்லா அவென்யூ அருகே சென்றுக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் மாணவர்கள் புடைச்சூழ ஊர்ந்து சென்றது. வழக்கம்போல் மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி ஆட்டம்போட்டபடி பஸ்-டே கொண்டாடியபடி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில், பேருந்து ஓட்டுநர் பிரேக் போட, பேருந்தில் தொங்கி கொண்டிருந்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் 24 மாணவர்களை கையும், களவுமாக பிடித்து அமைந்தகரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்களில், மணிகண்டன், கோகுல் நாத், திவாகர், பிரேம் நாத், சின்னராஜ், ராஜேஷ், ராஜி, ஜெயப்பிரகாஷ், புகழேந்தி, ஆகாஷ் ஆகிய 10 மாணவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின்பேரில், 7 மாணவர்களை காவல்நிலையம் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்.