சென்னை, ஜூன் 18: பாதுகாப்பு காரணங்களுக்க நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் வழங்க கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதி வேண்டும் என்று கூறியிருந்தார்..

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வத்தது.  அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது.
25 காவலர்கள் வரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் என கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது, நளினியை காணொளி காட்சியின் மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதுகுறித்து அடுத்த வாரத்திற்குள் நளினியிடம் தகவல் பெற்று தர சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.