சென்னை, ஜூன் 18:  சென்ட்ரல், எழும்பூர், பரங்கிமலை உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்கிறார். தமிழகம் மற்றும் புதுவையிலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தாண்டு சிறப்பு நிகழ்வாக சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (20-ம் தேதி) தொடங்கி 23-ம் தேதி வரை சென்ட்ரல், திருமங்கலம், மண்ணடி, வடபழனி, அசோக்நகர், சைதை, எழும்பூர், பரங்கிமலை ஆகிய 8 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறுகிறது. யோகாவுடன் தியானப்பயிற்சிகளும் நடைபெறும் எனவும், பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
20-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம். மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம். 21-ம் தேதி காலை 6.30 மணிக்கு திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம். மாலை 5.30 மணிக்கு எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம். 22-ம் தேதி காலை 6.30 மணிக்கு மண்ணடி மெட்ரோ ரெயில் நிலையம். மாலை 5.30 மணிக்கு பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம். 23-ம் தேதி காலை 6.30 மணிக்கு வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம். மாலை 5.30 மணிக்கு அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.