விழுப்புரம், ஜூன் 19: மரக்காணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21.64லட்சம் கையாடல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மரக்காணம் அருகே கந்தாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் 6 ரேஷன் கடைகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை தொகையை அந்தந்த கடைகளின் விற்பனையாளர்கள் உடனுக்குடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அவ்வாறு ரேஷன் கடைகளின் விற்பனை தொகையை செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் திண்டிவனம் சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் பால்ராஜ், கந்தாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் திடீர் தணிக்கை மேற்கொண்டபோது கடந்த 1.4.2014 முதல் 31.3.2016 வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள், கடைகளின் விற்பனை தொகையை சங்கத்திற்கு செலுத்தாமல் ரூ.21,64,801-ஐ கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இந்த கையாடலில் ரேஷன் கடை விற்பனையாளர்களான புதுப்பாக்கம் ராஜேந்திரன் (வயது 54), கந்தாடு முத்துக்குமார் (வயது 50), ஆறுமுகம், குரும்பரம் சீனவாசன் (வயது49), கே.என்.பாளையம் ராஜா (வயது 50), சங்க தலைவர் மரக்காணத்தை சேர்ந்த பரசுராமன், முன்னாள் செயலாளர் கந்தாட்டை சேர்ந்த பாஸ்கரன், எழுத்தர்கள் கந்தாடு ஸ்ரீதரன், தானிமேடு சந்தானம், கே.என்.பாளையம் தியாகராஜன், அலுவலக உதவியாளரான கந்தாட்டை சேர்ந்த எத்திராஜ் ஆகியோர்ஈடுபட்டதுதெரியவந்தது.

இதுகுறித்து மேலும் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ராஜேந்திரன், முத்துக்குமார், சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.