செயற்கை மழைக்கு முயற்சி செய்யப்படும்

சென்னை

சென்னை, ஜூன் 19: தமிழகத்தில் செயற்கை மழை பெய்விக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி கூறினார். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கும் செயல்பாடுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், அதிகாரிகளுடன் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவு, மாகரல் நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தற்போது கிடைத்து வரும் அதே அளவு தண்ணீர் குறைந்து விடாமல் பார்த்து கொள்ளுமாறும், தண்ணீர் சீராக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்பின்பு, சென்னையை அடுத்த ரெட்டேரியில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகர பகுதியில் போதுமான அளவு குடிநீர் வழங்க நீர் ஆதாரத்தை அதிகரிக்க சென்னை குடிநீர் வாரியம் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகர மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் நெருக்கடியான நிலை ஏற்படும் போது வெளிமாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  செயற்கையாக மழைப்பொழிவை ஏற்படுத்த பல்வேறு மாநிலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. சில இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயற்கையாக மழைப்பொழிவை ஏற்படுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.