திருவள்ளூர் ஜூன் 19: திருவள்ளூர் நகராட்சியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவற்றைப் பயன்படுத்திய வியாபாரி களுக்கு மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 100 முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து கடைகள் மற்றும் ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என கண்டறிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டார். இதை அடுத்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் ராமகிருஷ்ணன், வெயில் முத்து, மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று திருவள்ளூர் கருக் குழாய் தெரு ,பெரியகுப்பம், அன்னை இந்திரா காந்தி சாலை, அண்ணா சாலை ஜெயின் ரோடு ஆற்றங்கரை யோரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடை , பெட்டி கடை மற்றும் டாஸ்மாக்கில் பார்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பயன்படுத்த வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருப்பது தெரியவந்தது இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரூ. 2000 மதிப்புள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்தது.

வரும் காலங்களில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி எச்சரித்தார்.