சென்னை, ஜூன் 19: சென்னை விமான நிலையத்திற்கு காதலியுடன் வந்த சீன வாலிபரிடம் போலி டிக்கெட் என்பதால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்றிரவு விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாங்காங் செல்வதற்காக சீனாவை சேர்ந்த கலீல் சியூ(வயது 19) என்ற வாலிபரும், அவரது காதலியும் நேற்றிரவு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

4-வது நுழைவுவாயிலில் இருவரும் தங்களது பாஸ்போர்ட் பயண சீட்டு அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.
11 மணிக்கு விமான நிலையத்திற்கு உள்ளே வந்த அவர்கள், வரவேற்பறையில் 1 மணிவரையில் அமர்ந்திருந்துள்ளனர். விமான புறப்பாடு அறிவிப்பு செய்யப்பட்டவுடன், காதலி மட்டும் சென்றுள்ளார்.

பின்னர், 4-வது நுழைவு வாயில் வழியாக வெளியே வந்த அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவர் போலி விமான டிக்கெட் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, தனது காதலியை வழியனுப்பவே தான் வந்ததாக கூறியுள்ளார். இருப்பினும், போலி டிக்கெட் மூலம் விமான நிலையத்தினுள் நுழைந்த வாலிபரை, விமான நிலைய காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் நள்ளிரவில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.