சென்னை, ஜூன் 19:தமிழகத்தின் மாநகராட்சியாக உதயமாகும் ஆவடியுடன் பட்டாபிராம், கோவில்பதாகை போன்ற பகுதிகள் சேர்க்கப்படுகின்றன. மேலும் திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் பூந்தமல்லி, வானகரம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் சில பகுதிகளும் பொதுமக்களின் கருத்தை அறிந்த பிறகு சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

நகராட்சியாக உள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக இது அமலுக்கு வருகிறது என்பதால் ஆவடி நகராட்சியின் இப்போதைய 48 வார்டுகளும் மாநகராட்சியாக தரம் உயரும். மேலும் மேயர், கவுன்சிலர்கள், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.

இதுகுறித்து ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான க.பாண்டியராஜன் கூறியதாவது:- ஆவடி நகராட்சிப் பகுதியில் 5.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே தரம் உயர்த்தப்படுகிறது. ஆவடிக்கு அருகில் உள்ள நகரங்கள் மாநகராட்சியோடு இணையுமா, இணையாதா என்பது இப்போது கூற முடியாது. அது குறித்து அரசு முடிவெடுக்கும்.

மாநகராட்சியாக தரம் உயர்வதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், வளர்ச்சித் திட்டங்கள், கிடைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் நிதிகள் அதிகளவு கிடைப்பதுடன், அதைக் கொண்டு வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும். இப்போதும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ரூ.2 கோடி செலவில் ரயில்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவை நிறைவுற்றதும் குறைந்தது 3 விரைவு ரயில்களாவது ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை வைக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு பூந்தமல்லி, திருநின்றவூர், வானகரம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகள் ஆவடி மாநகராட்சியில் சேர்க்கப்படலாம். பட்டாபிராம் கோவில் பதாகை பகுதிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக உள்ளது. தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடி உதயமாகி உள்ளது.