ரெயில் போக்குவரத்தில் தனியாருக்கு அனுமதி

இந்தியா

புதுடெல்லி, ஜூன் 19: பயணிகள் நெருக்கடி இல்லாத சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தொழிற்சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 ரெயில்களை இயக்கும் பொறுப்பு ஐஆர்சிடிசியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்திய ரெயில்வேயில் தனியார் மயத்தை புகுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக ரெயில்வேயின் சுற்றுலா மற்றும் டிக்கெட் வழங்கும் அமைப்பான ஐஆர்சிடிசியிடம் பயணிகள் நெருக்கடி இல்லாத சுற்றுலா ஸ்தலத்திற்கு செல்லும் 2 ரெயில்கள் ஒப்படைக்கப்பட இருப்பதாக ரெயில்வே ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழித்தடங்கள் எவை என்பது விரைவில் அறிவிக்கப்படும். முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர வழித்தடத்தில் இயங்கும் ரெயில்களாக இவை இருக்கும் என தெரியவந்துள்ளது.

ரெயில் போக்குவரத்தை மேற்கொள்ளும் ஐஆர்சிடிசி ரெயிவேக்கு ஒரு பெரும் தொகையை குத்தகைக்காக வழங்கும் என தெரிகிறது. ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் கடந்த செவ்வாய்கிழமை அனைத்து வாரிய உறுப்பினர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தொழிற் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெயில்வேக்கு கிடைக்கும் வருவாயில் 53 சதவீதம் பயணிகள் டிக்கெட் மூலம் கிடைக்கிறது என்பதால் டிக்கெட் மானியத்தை பயணிகள் தாமாக முன்வந்து கைவிட வேண்டும் என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.  எல்பிஜி சிலிண்டருக்கான மானியத்தை வசதி படைத்தவர்கள் கைவிடக்கோரி உஜ்வாலா பிரச்சாரம் மேற்கொண்டதை பின்பற்றி இந்த பிரச்சாரமும் செய்யப்படுவதாக உள்ளது.

இது தவிர ரெயிவேயின் அதிகாரிகள் உயர் வகுப்பில் மட்டுமே பயணிக்காமல் சாதாரண வகுப்பிலும் பயணித்து ரெயில்களில் தூய்மை மற்றும் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கேட்டுக்கொண்டுள்ளார்.