செங்குன்றம்,ஜூன் 19 ; விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில், 45 வது திருவள்ளுவர் சிலையை, கும்மிடிப்பூண்டி டிஜெஎஸ் கல்வி வளாகத்தில், தமிழ்ச் சங்க நிறுவனர் வி,ஜி,சந்தோசம் திறந்து வைத்தார். விழாவிற்கு நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் தலைமையேற்றார். கும்மிடிப்பூண்டி டிஜெஎஸ் கல்வி வளாகத்தில், தமிழ்ச் சங்க சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவனர் வி,ஜி,சந்தோசம் திறந்து வைத்தார்.

கல்லூரியின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்று பேசுகையில், கடவுள் மனிதனுக்கு அறிவுரை கூறியது பகவத் கீதை,மனிதன் கடவுளை வாழ்த்தி போற்றியது திருவாசகம்,மனிதனுக்கு மனிதன் அறிவுரை கூறியது திருக்குறள் என்றார். திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த வி.ஜி.பி.உலகத் தமிழச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 60 ஆண்டுகளுக்கு முன்,நான் கும்மிடிப்பூண்டியில் சைக்கிளில் சென்று தவணை முறையில், ரேடியோ,க டிகாரம் போன்றவற்றை விற்ற இடங்களில் , இன்று வி.ஜி.பி தமிழ்ச் சங்கத்தின் 45 வது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருவள்ளுவரையும், திருக்குறளையும் நாங்கள் அதிகம் நேசிப்பதால்,இந்தியா மற்றும் உலக நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அதிகம் நிறுவி வருகிறோம்.வள்ளுவர் இல்லையேல் தமிழின் பெருமை இல்லை. தமிழின் பெருமை வள்ளுவராலேயே ஓங்கி ஒலிக்கப்படுகிறது.மாணவர்கள் தினமும் குறைந்தது ஒரு திருக்குறளையாவது படித்து,வாழ்வில் அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்றார்.