சென்னை, ஜூன் 20: சென்னையில் எப்போது மழை பெய்யும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று பிரபல தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

சென்னை நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரும் வற்றிப் போனதால் குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் ஆதம்பாக்கம், நங்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

குடிநீருக்கும் மக்கள் தினம் தினம் அல்லாடி வருகிறார்கள். எப்போது மழை வரும், தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்று ஏக்கத்தோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை நகர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் வடபகுதியில் குறிப்பாக சென்னையில் மழை இருக்கும் என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் தாக்கம் வருகின்ற நாட்களில் குறைந்து காணப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் என். புவியரசன் கூறுகையில், வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை.

ஆனால் இதன் விளைவாக அடுத்த 2, 3 நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசும். இதனால் சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் வறண்ட காற்று வீசுவதால் தான் சென்னையில் வெப்பம் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உள்ளது.

வடமேற்கு காற்று வீசும் பட்சத்தில் பகல் 11.30 மணிக்கு கடலில் இருந்து காற்று உருவாகி வெப்பநிலையை 2 முதல் 3 டிகிரிக்கு குறைத்துவிடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018 டிசம்பர் 5-ல் இருந்து சென்னையில் மழை பெய்யவில்லை என்றும், கடந்த வாரம் மட்டும் புறநகர் பகுதிகளில் மிதமான தூறல் மட்டுமே இருந்தது என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.