புதுடெல்லி, ஜூன் 20: தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு இடம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, கனிமொழி, மைத்ரேயன் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த இடங்களை பூர்த்தி செய்ய அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டசபையில் தற்போது கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுகவும், திமுகவும் தலா மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியும்.  திமுகவில் ஏற்கனவே வைகோவுக்கு ஒரு இடம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு இடத்தில் காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்குக்கு ஒரு இடத்தை ஒதுக்குமாறு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அசாமிலிருந்து ஏற்கனவே 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது அசாமில் அவரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலம் இல்லாததால், தமிழகத்தில் இருந்து அவரை தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் விரும்புகிறது.