சென்னை, ஜூன் 20: தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில நீரிழிவு மற்றும் நரம்பியல் துறையின் 7-வது வருடாந்திர மாநாடு சென்னையில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தென்னிந்தியாவில் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 29,30 ஆகிய தேதிகளில் 7-வது மாநாடு நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.  நரம்பியல் துறையிலும். நீரிழிவு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அளவிலான 1800 மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

நரம்பியல் துறை. நீரிழிவு துறை, பொது மருந்தகம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் 100 வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
நீரிழிவு நோய் கட்டுப்படுத்துதல், தைராய்டு பிரச்சனைகள், எலும்பு நோய்கள் மற்றும் தசைகள் சீரமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த மாநாட்டில் மருத்துவ விளக்கங்கள் அளிக்கப்படும்.

மேலும் இந்த மாநாட்டின் போது மேற்சொன்ன நோய்கள் தொடர்பான கருத்தரங்கு நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கு ஜூன் 28-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி இந்திய மருத்துவர்களுக்கு செயல் விளக்கம் நடைபெறும்.

சிகிச்சை முறை பற்றிய பயனுள்ள விவாதங்கள் நடைபெறும். மிகுந்த அனுபவம் பெற்ற சர்வதேச மருத்துவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதால் நீரிழிவு நோய், நரம்பியல் நோய் உள்பட முக்கிய வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில¢ இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் ரூடி பிலாஸ் மற்றும் ரிச்சார்டு கிண்டன் ஆகியோர் முக்கிய உரையாற்றுகிறார்கள்.  நீரிழிவு நோய் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் குறித்த பிரச்சனைகளுக்கு சிறப்பு மருத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.