சென்னை, ஜூன் 20:சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் உலகத்தரத்திற்கு இணையான அதிநவீன ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையில் உலகத்தரத்திலான மருத்துவ கருவிகளின் கண்காட்சியை இன்று அவர் பார்வையிட்ட பின்னர் கதிரியக்கவியல் துறையில் அதிநவீன கருவிகளை திறந்து வைத்த பின்னர் அவர் பேசியதாவது:- இன்று 20.06.2019 இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டவர் 2-ல் கதிரியக்கவியல் துறை, 16 கூறு சி.டி. ஸ்கேன் கருவி, எக்ஸ்-ரே உபகரணங்கள் மற்றும் ஸ்கேன் கருவி ஆகியன மொத்தம் ரூ.2.70 கோடி செலவில் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள டவர் 1,2,3 கட்டிடங்களில் படிபடியாக பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை ஆகிய அனைத்து துறைகளும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இம்மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 110 மாணவர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 23 மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறவுள்ளது.

காரப்பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, பெருந்துறை, விருத்தாசலம், ஓமலூர், மேலூர், அறந்தாங்கி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சி.டி.ஸ்கேன் கருவிகள் மற்றும் 30 கோடி ரூபாய் செலவில் திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளம் விரைவில் வழங்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எட்வின் ஜோ, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. நாராயணபாபு, உள்ளுரை மருத்துவர் மரு. ரமேஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.