சென்னை, ஜூன் 20: தி.நகர் அருகே பிசியோதெரபிஸ்ட்டாக வீட்டினுள் நுழைந்த பெண் ஒருவர், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.நகர் அபிபுல்லா ரோட்டை சேர்ந்தவர் ராதா (வயது 65). இவர், பிசியோதெரபிஸ்ட் தேவை என்று கூறி ஏஜென்ட் மூலம் பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரை நியமித்துள்ளார்.

அந்த பெண் தினமும் வீட்டிற்கு வந்து இவருக்கு உடற்பயிற்சி மற்றும் பிசியோ சிகிச்சை அளித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இந்த நிலையில், நேற்று ராதா தனது நகைகளை கழற்றி டேபிள் மீது வைத்துவிட்டு சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்க்கும்போது, டேபிள் மீது வைத்திருந்த நகைகள் உட்பட பீரோவில் வைத்திருந்த நகை என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான அந்த பெண்ணை தேடிவருகின்றனர். மேலும், அந்த பெண்ணை பரிந்துரைத்த நிறுவனத்திடமும் விசாரணை நடந்துவருகிறது.