மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

TOP-3 இந்தியா

புதுடெல்லி, ஏப்.10: ரஃபேல் விவகாரத்தில் புதிய ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தாங்கள் விசாரணை நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களைக் கையாளும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என வாதாடினார்.

இதையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், அரசு தலைமை வழக்குரைஞர் குறிப்பிடும் ஆவணங்கள் அனைத்தும் ஏற்கெனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டதாக வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தது. அதன்படி இன்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது ஆய்வு கூடாது எனக் கூறிய மத்திய அரசின் கோரிக்கையை அதிரடியாக நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், அனைத்து வித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என அதிரடியாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பத்திரிகைகளில் வெளியான ரஃபேல் ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. ரஃபேல் தொடர்பான பாதுகாப்புத்துறையின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தவை தான் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், ரஃபேல் வழக்கு தொடர்பான புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.