புதுடெல்லி, ஜூன் 20: நாடுமுழுவதும மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி குழு அமைக்கிறார். அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது.

மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, பிகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஒடிஸா முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்றும், ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி குழு அமைப்பார் என்றும் கூறினார்.