திருவள்ளூர், ஜூன் 20: குப்பை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் எரிந்து கருகியது. இதில் 10க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.

தீ விபத்தால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் புகை மண்டலமாக மாறியதால் மூச்சு திணறலால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ளது கீழ சேரி அருந்ததியர் கிராமம்.இங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட குடிசைகளில் ஏராள மானோர் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை 10 மணி அளவில் கீழ சேரி அருந்ததியர் புறத்தை சேர்ந்த சின்னையா (வயது 55) என்பவர் தன்னுடைய குடிசை அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்தி கொண்டிருந்தபோது காற்று பலமாக வீசியது. அப்போது அவரது குடிசையில் பற்றி தீப்பிடித்தது.இதில் பதறிப்போன சின்னய்யா தீயை அணைக்க முயன்றும் காற்று பலமாக வீசியதால் தீ மேலும் பரவி குடிசை எரிந்தது.

அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர்வெடித்து சிதறியதால் அருகருகே இருந்த 19 வீடுகள் எரிந்தது.
அப்போது 10 சிலிண்டர்கள் வெடித்ததால் மக்கள் செய்வதறியமால் உயிர் பிழைத்தால் போதும் என்று அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த தீ விபத்தில் ஜெகன், மாலா, வெங்கடேஷ், சூர்யா, கௌதமி, ராமு, சத்யா, புஷ்பா, சபீனா, அமுல்ராஜ், பத்மா, முனியம்மாள், சீனிவாசன், அரசம்மாள், மகேஸ்வரி, நாகராஜ், உதயா, பெண் கட்டம், வெங்கடம் மாள், ஆகியோரது வீடுகளும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பேரம்பாக்கம் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மரங்கள், ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த தீ விபத்தில் 19 குடிசைகள் இருந்த பீரோ கட்டில் துணிமணிகள் மின்சாதன பொருட்கள் மற்றும் தங்க நகைகள் பணம், ஆட்டோ முழுமையாக எரிந்து தீயில் கருகியது இதுகுறித்து தகவல் அறிந்ததும் சப் கலெக்டர் பெருமாள், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் மற்றும் வருவாய் துறையினர் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மக்கள் வெளியேறியதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. அந்த தீ விபத்தால் சுற்றியுள்ள கிராமங்களிலும் புகை மண்டலமாக மாறியதால் வயதானவர்கள், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டு 19 குடும்பத்தினர் நிர்கதியாக உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.