நாட்டிங்காம், ஜூன் 21: ஆஸ்திரேலியா நிர்ணயித்த அதிகபட்ச இலக்கை துரத்தியபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேசம் கடைசிவரை போராடி 48 ரன்களில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து வெளுத்துவாங்கியது. தொடக்க வீரர் வார்னர் (166) சதம் கடந்தார், கேப்டன் ஆரோன் பின்ச் (53), கவாஜா (89) ஆகியோர் அரைசதம் கடந்து, எதிரணியின் பந்தவீச்சை துவம்சம் செய்தனர். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

பின்னர், விளையாடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் இக்பால் (62) மற்றும் மஹ்மூதுல்லா (69) ஆகியோர் அரைசதம் கடந்தார். அணியின் நம்பிக்கை நங்கூரம் ஷகிப் மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்துவார் என்று நினைத்திருந்த நிலையில், அரைசதம் கூட கடக்காமல் ஷகிப் (41) ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், ரஹீம் (102) பொறுப்புடன் விளையாடி சதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிவரை போராடிய வங்கதேசம் ஆட்டநேரமுடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்து, தோல்வியை கண்டது. இதன்மூலம், 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.