சென்னை, ஜூன் 21: டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்த யோகா தின நிகழ்வை அமைச்சர் கே. பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.
சர்வதேச யோகா தினம் கொண்டா டப்படும் நிகழ்வில், சென்னையைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மக்களோடு கைகோர்த்ததன் வழியாக ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா நிகழ்வை டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் நடத்தியது. அமைச்சர் கே.பாண்டியராஜன் இதனை தொடங்கிவைத்தார்.

கோபாலபுரத்திலுள்ள மாநகராட்சி திடலில் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த யோகா தின நிகழ்வில் தினசரி வாழ்க்கையில் எந்தவொரு நபரும் எளிதாக கற்றுக்கொண்டு நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய வகையில் யோகா பயிற்றுனர்களால் நடத்தி காண்பிக் கப்பட்ட சிறப்பு யோகா செய்முறை விளக்கங்கள், வந்திருந்த அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தின.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறுகையில், தொடர்ந்து தவறாமல் யோகா பயிற்சி செய்து வருபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சிறப்பான கோட்பாடாக யோகா திகழ்கிறது.  நீரிழிவை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் யோகாவின் அவசியம் குறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் என்றார், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர், டாக்டர் வி. மோகன் கூறுகையில், “நீரிழிவை சமாளிப்பதற்கும், முறையாக மேலாண்மை செய்வதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை பரப்புவதில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.

சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும் நாளான இன்று, நீரிழிவை திறம்பட கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு நமது தினசரி வாழ்க்கையில் யோகா பயிற்சிகளை இணைத்துக்கொள்வது மீதான விழிப்புணர்வை மேலும் பரப்புவதில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று கூறினார்.