திருச்சி, ஜூன் 21:  திருச்சி விமான நிலையத்தில் ரூ.59.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஹசாருதீன், இளையான்குடியை சேர்ந்த சாகுல்ஹமீது, முகம்மது ரசூல் ஆகியோர் தங்கத்தை தங்கள் உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல் திருப்பூரைச் சேர்ந்த ஜாபர்அலி, திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் தங்கள் கழுத்தில் தங்க சங்கிலிகளை மறைவாக அணிந்து கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
5 பேரிடம் இருந்தும் மொத்தம் 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து 5 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.60லட்சம் ஆகும்.
மேலும் இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.