சென்னை, ஜூன் 21: முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாநில ரத்த பரிமாற்று குழுமத்துடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்படும் மாபெரும் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாநில ரத்த பரிமாற்று குழுமத்துடன் இணைந்து, தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாபெரும் ரத்ததான முகாம், மாநிலத்தில் உள்ள 89 ரத்த தான வங்கி முகாம் மூலமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகரங்கள், என 40 இடங்களில் நடைபெறும்.

இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சார்ந்த ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகள், மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படையை சார்ந்த ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகள், காவல் பயிற்சி பள்ளிகளில் பயிற்சியில் இருக்கும் காவல் ஆளினர்கள், என 13,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வார்கள்.

இம்மாபெரும் ரத்த தான முகாம் மூலமாக பெறப்படும் ரத்தம், அரசு பொது மருத்துவமனைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்யும் காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டாக்டர் கே. ஜெயந்த் முரளி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன்,, காவல்துறை கூடுதல் இயக்குநர் (பயிற்சி) ஆர்.சி. குடவாலா, காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) ஷங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.