சென்னை, ஜூன் 21: திருநங்கையை அடித்து சிக்கராயபுரம் கல்குவாரியில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், 8 திருநங்கைகளை கைது செய்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  கடந்த 7-ம் தேதி அன்று மாங்காடு அடுத்துள்ள சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் திருநங்கை ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாங்காடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திவந்தனர்.

குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.  குன்றத்தூர் அருகே சிவன்தாங்கல் என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கடை கடையாக சென்று பணம் வசூலித்து தலைவிகள் கணபதி மற்றும் மகா ஆகியோரிடம் வசூலித்த பணத்தை கொடுத்துவிட, அவற்றை பங்கிட்டு அனைவரின் தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறதாம்.

இதனிடையே, இங்குள்ள திருநங்கைகள் இடையே நடைபெறும் உரையாடல்களையும், நடவடிக்கைகளையும் , தலைவிகளிடம் போட்டுக்கொடுப்பதையே ரவி என்கிற சௌமியா என்ற திருநங்கை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக சௌமியாவிற்கும், வசந்த் என்கிற வசந்தி (வயது 24). செல்வமணி என்கிற ஸ்ரேயா (வயது 24), வெங்கடேசன் என்கிற ஆர்த்தி (வயது 24), மனோஜ் என்கிற மனிஷா (வயது 23), ரோஸ் என்கிற வினோதினி (வயது 25), சங்கர் என்கிற சுதா (வயது 22), அசோக் என்கிற ரெஜினா (வயது 26), சுபிக்ஷா என்கிற திவ்யா (வயது 24) ஆகிய 8 திருநங்கைகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சௌமியாவை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்று குளித்துவிட்டு வரலாம் என்று கூறி கல்குவாரிக்கு அழைத்துச்சென்று, சௌமியாவை மற்ற 8 திருநங்கைகளும் அடித்து தாக்கியதுடன், அவரை குவாரி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.  இது குறித்து தலைவிகளுக்கு தெரியவர, சௌமியா கொலை குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க தினமும் தலா ரூ.3,000 பணம் தரவேண்டும் திருநங்கைகளை மிரட்டியதால், டார்ச்சர் தாங்காமல் திருநங்கை ஒருவர் காஞ்சிபுரத்திற்கு தப்பிச்சென்றுள்ளார். அவரை பிடிக்க சென்றபோது, தலைவிகளில் ஒருவரான மகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைவிகளின் மிரட்டலை தாங்கமுடியாமல் சரணடைந்துவிடலாம் என்று திருநங்கைகள் முன்வந்த அதேசமயத்தில், பிரேத பரிசோனை முடிவு வெளிவர, சௌமியா கொலை செய்யப்பட்டது போலீசுக்கு தெரியவந்ததையடுத்து, 8 பேரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய கணபதியையும் போலீசார் தேடிவருகின்றனர்.