சென்னை, ஜூன் 22: தாம்பரம், செங்கல்பட்டு இடையே பணிகள் நடைபெற இருப்பதால் நாளை இந்தத்தடத்தில் ஏழு புறநகர் பயணிகள் ரெயில், 32 மின்சார ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே பாலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஒட்டிவாக்கம் – செங்கல்பட்டு இடையே சுரங்கப்பாதைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 7 புறநகர் பயணிகள் ரெயில்களும், 32 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35க்கு புறப்படும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து 8.25க்கு மேல்மருவத்தூர் புறப்படும் ரெயில், மேல்மருவத்தூரில் இருந்து 11.30 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரெயில், விழுப்புரத்தில் இருந்து பகல் 1.55க்கு விழுப்புரம் செல்லும் ரெயில், மேல்மருவத்தூரில் இருந்த மாலை 3.30க்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில், விழுப்புரத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு தாம்பரம் புறப்படும் ரெயில், தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு விழுப்புரம் புறப்படும் ரெயில், ஆகிய ரெயில்களின் சேவை நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை காலை 3,54 மணி முதல் பகல் 1.45 மணி வரை செல்லும் 15 ரெயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு காலை 6.50 மணி, 7.05 மணி, பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில்களின் சேவை பாதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் அனைத்தும் தாம்பரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை காலை 3.55 மணி முதல் பகல் 1.50 மணி வரை செல்லும் 17 மின்சார ரெயில்களின் சேவை சென்னை தாம்பரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.45 மணி, 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 7.05 மணி, 10.45 மணிக்கு புறப்படும் ரெயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை சற்று குறைக்கும் வகையில் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, செங்கல்பட்டில் இருந்து திருமால்பூருக்கு காலை 8.50 மணி, மாலை 3.20 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும். அதே போன்று செங்கல்பட்டில் இருந்து காலை 11.13 மணிக்கு அரக்கோணத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து பகல் 1.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மறு மார்க்கத்தில் திருமால்பூரில் இருந்து காலை 7.05 மணி, 10.25 மணிக்கு செங்கல்பட்டு நோக்கி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 4.45 மணி, 8 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.