தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படும்

சென்னை

சென்னை, ஜூன் 22: சென்னையில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி போடும் பணி அடுத்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை நகர தெருக்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 82,458 தெரு நாய்கள் இருந்த. 2018-ல் இந்த எண்ணிக்கை 57,366 ஆக குறைந்து இருக்கிறது.

நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்படுவதன் மூலம் இனப்பெருக்கம் குறைந்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெறிப்பிடித்த நாய்கள் கடிப்பதால் உயிரிழக்க நேரிடுவதை தடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் கால் நடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள், நாய்களை பிடிப்பவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர்கள் இடம் பெற்று இருப்பார்கள். இவர்கள் மண்டலம் வாரியாக சென்று வண்ணத்துப்பூச்சி வலைகளை வீசி நாய்களை பிடிப்பார்கள். உடனடியாக மருத்துவர்கள் தடுப்பூசி போடுவார்கள். தடுப்பூசி போட்ட நாய்களுக்கு அடையாள குறியீடு செய்யப்படும்.

அடுத்த மாதத்தில் தொடங்கும் இந்த பணி 2 மாதத்திற்கு நீடிக்கும் என்றும், ஒவ்வொரு தெரு வாரியாக முதலில் நாய்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தடுப்பூசி போடுவதுடன் கருத்தடை ஊசியும் சேர்த்தே போடுவதற்கான திட்டமும் வகுக்கப்பட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு நாளும் நாய்களை பிடிக்கும் வண்டிகள் மண்டலம் வாரியாக செல்கின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை ஊசி போடப்படுகிறது என்றனர்.