புதுச்சேரி, ஜூன் 22: பெற்ற தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் தாயை திட்டியதால் ஆத்திரம் அடைந்து தூங்கிக்கொண்டிருந்த அண்ணனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:- புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கோபால் கடை பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 21). இவரது தம்பி ஆனந்தராஜ் (வயது 21) இவர்கள் இரண்டு பேர்களும் இரட்டையர்கள். இருவருக்கும் திருமணமாகி உள்ளது. அருள் ராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் குடித்து விட்டு வந்து தம்பி மற்றும் தாயிடம் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று நேற்றிரவு குடித்து விட்டு வந்து தம்பியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தட்டிக்கேட்ட தாயை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இரவு 2 மணியளவில் போதையில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் அருள்ராஜியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஆனந்த ராஜ் தப்பி ஓடி விட்டாராம்.

அதிகாலையில் அருள்ராஜ் எழுந்து வராததால் அவரது தாய் சென்று மகனை பார்த்துள்ளார்.  அப்போது தலையில் கல்லை போட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான ஆனந்த ராஜியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தாயை திட்டியதால் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.