சென்னை, ஜூன் 22: திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தற்போதைய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கூறியிருக்கிறார். இதனிடையே தேர்தல் நடைபெற்றாலும் வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு 2019-2022 ஆண்டுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதாக இருந்தது. அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் பாதுகாப்புக் கருதி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடைபெற இரண்டு, மூன்று நாட்களே இருந்த நிலையில் தென்சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தேர்தலுக்கு தடை விதித்தார்.
பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்பட்ட 61 உறுப்பினர்கள் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

நடிகர் சங்கம் சார்பில் ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை என்று நீதிமன்றம் கூறி திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டது.  ஏற்கனவே தபால் ஓட்டுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் தேர்தலை நிறுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தேர்தல் நடத்துவதற்காக இரண்டு இடங்களை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பணித்தது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் அல்லது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் அபாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஒன்றில் தேர்தலை நடத்தலாம் என்று நடிகர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாண்டவர் அணி தலைவர் நாசர், பூச்சி முருகன் ஆகியோர் கூறினர். திட்டமிட்டபடி தேர்தல் நாளை நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் சங்கரதாஸ் அணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி முன்பு வெளியானதால் சங்க உறுப்பினர்கள் பலரும் வெளியூருக்கு சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் நாளை ஓட்டு போட வர முடியுமா என்பது தெரியவில்லை என்று எதிரணியைச் சேர்நத ரமேஷ் கண்ணா கூறினார். அவசரம் அவசரமாக தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன? நிதானமாக தேர்தலை நடத்தலாமே என்றும் ரமேஷ் கண்ணா கூறினார்.

இதனிடையே சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளை தேர்தல் நடைபெறும் என்று கூறியதால் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இடையே குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.