சென்னை, ஜூன் 22: காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள்தான் பல்லக்கு தூக்குவது? வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு ஆவேசமாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி முறியக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு திமுகவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.என்.நேரு காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.சுக்கு எத்தனை நாட்கள் தான் பல்லக்கு தூக்குவது என்று ஆவேசமாக கேட்டார்.

அத்துடன் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக போட்டியிட்ட 19 இடங்களிலும் வென்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தோழமை கட்சியினர் 4 பேர் வெற்றியடைந்தனர்.

9 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தேனியில் மட்டும் தோல்வியடைந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதில் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலைப்போல் இல்லாமல் இந்த முறை திமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை மாவட்ட அளவில் நடத்தாமல் மாநில அளவில் திமுக தலைமையுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் மக்களவை தேர்தல் இட ஓதுக்கீட்டு முறையை பயன்படுத்தினால் காங்கிரசுக்கு 24 சதவீத இடங்களே கிடைக்கும் என்பதால் கூடுதல் இடங்களை கேட்டு பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தனித்து போட்டியிடலாம் என்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசிய போது, கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க முன் வந்தது என்றும் கூறியதாக தெரிகிறது.

அதனால், திமுகவிடமிருந்து இருந்து அதிக இடங்களைப் பெற வேண்டும் அல்லது, தனித்துப் போட்டியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.  200 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடியாவிட்டாலும் தென்சென்னை பகுதியில் உள்ள 35 வார்டுகளில் தனித்துப் போட்டியிட வேண்டும். போட்டியிடும் வார்டுகளில் காங்கிரஸை வெற்றிபெற வைப்பேன் என்று அவர் கூறினார்.

இது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மூத்த திமுக தலைவர் கே.என்.நேரு, இனியும் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கக்கூடாது என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். குடிநீர் பிரச்சனைக்காக திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது:-இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சி கருத்து அல்ல. கூட்டணியில் சேர்ந்து எல்லாம் ஜெயிச்சுட்டாங்க. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது யுவராஜ், மயூரஜெயக்குமார் திமுஎக ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் இருந்த இந்த உறவை கெடுத்தது இவர்கள்தான். சட்டமன்றத்தில் தலைவர் முன்னாடியே செல்லக்குமார் விமர்சனம் செய்கிறார். ஆனால் அதே செல்லக்குமாரை தற்போது கூட்டணியில் வேலை செய்து ஜெயிக்க வைக்கிறோம்.நேற்று ஒருவர் பேசுகிறார் ‘நாங்க தென்தென்னையில் 200 வட்டத்தில் 35 வட்டத்தை பெற்றே திருவேன்’ என்கிறார். நான் தலைவருக்கு சொல்வேன். இந்த மக்களுக்கு நாம் பயன்பெற வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே நின்றால் நன்றாக இருக்கும். எவ்வளவு நாளுக்குத்தான் பல்லக்கைத்தூக்குவது. தூக்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இது என்னுடைய கருத்து.

தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிஸ் கட்சிக்குள் ஒவ்வொருத்தரும் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற போட்டியில் 35 சீட்டு வாங்குவேன், 50 சீட்டு வாங்குவேன்னு சொல்றான். நாங்க என்ன குச்சிமிட்டாய் வச்சுகிறதா? தி.மு.க.காரன் எங்க போவான். இது என்னுடைய கருத்து. தலைவருடைய கருத்து அல்ல. திருச்சியை பொறுத்தவரையில் நாங்க தனியாக நிற்க வேண்டும் என்பதை சொல்லி வலியுறுத்துவேன் என்றார்.
அப்போது கூட்டத்தில் உள்ள தொண்டர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.
நாங்களும் தயார்: கே.எஸ்.அழகிரி
திமுக தனித்து போட்டியிட முடிவெடுத்தால் அதை அனுசரித்து நாங்களும் முடிவெடுப்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது குறித்து அழகிரியிடம் கேட்ட போது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலிமையாக இருக்கிறது. கே.என். நேரு பேசியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்போது சாலைப் பயணத்தில் இருக்கிறேன். தனித்து போட்டியிட திமுக முடிவெடுத்தால் அதைப் பொறுத்து காங்கிரசும் முடிவெடுக்கும் என்றார்.