3 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகள்

சென்னை

சென்னை, ஜூன் 22: பொது மக்களுக்கு இலவச கண் சிகிச்சை வழங்குவதில் சாதனை படைத்த 3 கண் மருத்துவமனைகளுக்கு மத்திய சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் 3 விருதுகள் வழங்கப்பட்டன.  மத்திய சென்னை அரிமா சங்கம் 9.8.1971 அன்று துவக்கப்பட்டது. கடந்த 48 ஆண்டுகளாக இந்த சங்கம் பொது மக்களுக்கு சேவைகளை செய்து வருகிறது.

இலவச கண் சிகிச்சையில் சாதனை படைத்த ஹெலன் ஹெல்லர் 27.6.1880 அன்று பிறந்தார். 1.6.1968 அன்று மரணமடைந்தார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி அவரது நினைவு தினத்தை சிறப்பாக அரிமா சங்கம் நடத்தி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் கண் சிகிச்சையில் சாதனை படைத்தவர்களுக்கு 3 சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது. சென்னையில் உள்ள சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 கண் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

முதலாவதாக ஐதராபாத் அரிமா சங்கம் நடத்தும் சதுரம் கண் மருத்துவமனைக்கு ‘சிறந்த கண் பராமரிப்பு விருது’ வழங்கப்பட்டது.  இரண்டாவதாக ஐதராபாத் சதுரம் கண் மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ஏ.வெங்கடாசலத்திற்கு ‘கண் பார்வையற்றோருக்கான சிகிச்சை பிரிவில் சாதனை விருது’ வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜால்னா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ கணபதி நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவர் நம்ரதா கப்ராவுக்கு டாக்டர் சீதாலட்சுமி நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழாவில் அரிமா என்.எஸ். சங்கர் கூறுகையில், ஹெலன் ஹெல்லர் நினைவு நாளில் கண் சிகிச்சையில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்குவது பொருத்தமானதாகும் என்று கூறினார். இந்தியா முழுவதிலும் 150 கண் மருத்துவமனைகளை அரிமா சங்கம் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.